எனவே, அலீ (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன் முதல் பணியாக, அனைத்து பிராந்தியக் கவர்னர்களையும் ஆiட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்தார்கள். இந்த நிலையில், அலீ (ரலி) அவர்களது மிகவும் விருப்புக்குரிய நெருக்கமான நண்பர்களான இப்னு அப்பாஸ் மற்றும் முகீரா பின் ஷப்பா (ரலி) போன்றவர்கள், இத்தகைய நடவடிக்கைகளை சற்றுப் பிற்போடுமாறும், இன்னும் இதற்கு எதிராகவும் கருத்துத் தெரிவிக்கலானார்கள்.
முதலில், அனைத்துக் கவர்னர்களிடமும் ''உங்களிடம் விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்ளுமாறு முதலில் வேண்டிக் கொள்ளுங்கள்"" என்று அவர்கள் அறிவுரை கூறலானார்கள். நீங்கள் ஆட்சிக் கட்டிலில் உறுதியாக, ஸ்திரத் தன்மையுடன் அமர்ந்து கொண்ட பிறகு, நீங்கள் விரும்பிய நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்று அவர்கள் அறிவுரை கூறலானார்கள். இப்பொழுது, உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கு முன் நீங்கள் அவர்களை பதவியில் இருந்து அகற்றினீர்கள் என்று சொன்னால், அவர்கள் உங்களுக்கு எதிராகக் கூட திரும்பக் கூடும், இன்னும் உங்களை ஒரு கலீஃபாவாகக் கூட அவர்கள் அங்கீகரிக்க மறுக்கக் கூடும். இந்த நிலையில், உதுமான் (ரலி) அவர்களது படுகொலை கூட மிகச் சிறிய பிரச்னையாகி விடலாம், இன்னும் இதன் பின்னணியில், உங்களுக்கு எதிராகக் கூட அவர்கள் ஆயுதங்களைக் கூட தூக்கும் நிலை வந்தும் விடலாம் என்றும் கூறலனார்கள்.
ஆனால் அலீ (ரலி) அவர்கள் இந்த அறிவுரைகளை யாவும் செவி மடுக்கவில்லை, தனது நிலையில் உறுதியாக இருந்ததோடு, நடவடிக்கையில் இறங்க ஆரம்பித்தார்கள். இந்த நிலையில், முகீரா பின் சுப்பா (ரலி) அவர்கள், மிகவும் சிக்கலான நிலையில் தான் இருப்பதாகவும் உணர ஆரம்பித்தார்கள். அலீ (ரலி) அவர்களின் நடவடிக்கையில் அதிருப்தியுற்றவர்களானார்கள்.
கலீபா அவர்களே..!
உங்களது இந்த விபரீதமான நடவடிக்கைகள் என்னையும், என் போன்றவர்களையும் சிக்கலில் மாட்டி வைத்து விடும் என்றும் எச்சரித்தார்கள்.
பின் அவர், மதீனாவை விட்டும் வெளியேறி மக்காவில் வந்து குடியேறலானார்கள்.
புதிய கவர்கனர்களுக்கு இனிமையான வரவேற்பு ?
இப்பொழுது அலீ (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட அனைத்துப் புதிய கவர்னர்களும் தங்களுக்கப் பணிக்கப்பட்ட பிராந்தியங்களுக்குச் சென்று, பணியில் அமர ஆரம்பித்தார்கள். ஆனால், அவர்கள் பணியில் அமர்ந்தார்களோ இல்லையோ, அவர்களது பயணங்கள் கூட அமைதியற்றதாகவும் மிகவும் சிரரமாகவுமே அமைந்தது.
எகிப்து தேசமானது அலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்களை அதிகம் கொண்ட பூமியாக இருந்தது. இருப்பினும் புதிய கவர்னர் தனது பொறுப்பை ஏற்கச் செல்லும் காலத்தில், நிலைமை முற்றிலும் மாறி விட்டிருந்தது. சிலர் புதிய கவர்னரை அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட போதிலும், மிகவும் உறுதியான மக்கள் கூட்டம் ஒன்று, உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கு உடனடித் தீர்வு ஒன்றை எடுக்க வேண்டும், கொலைகாரர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும், அதற்கான உடனடி நடவடிக்கையை அவர்கள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்யலானார்கள். இவ்வாறான உறுதியான நடவடிக்கையை அலீ (ரலி) அவர்கள் எடுக்கவில்லை என்று சொன்னால், புதிய கவர்னருக்கும் அவரது அரசுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்கள் கூற ஆரம்பித்தார்கள். இந்த முறையீட்டுக்கு எதிர்ப்புகள் இல்லாமலில்லை, இன்னுமொரு கூட்டத்தார் உதுமான் (ரலி) அவர்களைக் கொலை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்த ஆரம்பித்தார்கள்.
இதே போன்ற பிரச்னையை, பஸராவின் புதிய கவர்னரும் எதிர் கொண்டார். ஒரு கூட்டத்தார் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு ஆதரவாகவும், இன்னொரு கூட்டத்தார் இவர்களுக்கு எதிராகவும் நின்றார்கள்.
கூபா கவர்கர் இன்னும் தனது இருப்பிடத்திற்குச் செல்லவில்லை, செல்லும் வழியில் இருந்து கொண்டிருந்த பொழுது, ஒரு மிகப் பெரும் ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டார். அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கூபாவின் கவர்னரைப் பார்த்து,
'நீங்கள் இங்கிருந்து திரும்பிச் சென்று விடுங்கள்", அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் இருந்த இடத்தில் உங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை, உங்களது வாழ்வை நீங்கள் விபரீதத்திற்குள்ளாக்கிக் கொள்ள வேண்டாம்"" என்று கூறி எச்சரித்தார்கள்.
இந்த எச்சரிக்கையினால் பயந்து போன அலீ (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட அந்த கவர்னர், மீண்டும் அவர் மதீனாவிற்கே வந்து விட்டார்.
சிரியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த இன்னொரு கவர்னர், தபூக்கை அடைந்த பொழுது - அங்கே முஆவியாவின் வீரர்கள் அவர் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது, அலீ (ரலி) அவர்களால் வழங்கப்பட்ட பதவிப் பிரமாணக் கடிதத்தை அவர்களிடம் காண்பித்த பொழுது அவர்கள் கூறினார்கள்,
'உங்களை நியமித்தது உதுமான் (ரலி) அவர்களாக இருப்பினும், உங்களது வரவு நல்வரவாகட்டும்", அவ்வாறல்லாது 'வேறு யாராலும் நீங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பின் தயவு செய்து திரும்பிச் சென்று விடுங்கள்" என்று கூறினார்கள். இவர்களை எதிர்த்து எதனையும் செய்ய இயலாத அந்தக் கவர்னரும் மதீனாவிற்கே திரும்பி வந்து விடுகின்றார்.
யமனை நோக்கிச் சென்ற கவர்னர், எந்த வித சிரமமுமில்லாமல் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து கொண்டாலும், அவருக்கு முன்னாள் இருந்த ஆட்சியாளர்கள் அரசின் கஜானாவைக் காலிக்கி வைத்து விட்டுச் சென்றிருந்தார்கள்.
அலி (ரலி) நடவடிக்கை
கூபா மற்றும் சிரியாவின் கவர்னர்கள் வெளிப்படையாக தாங்கள் அலீ (ரலி) அவர்களை எதிர்ப்பதாக அறிவித்தார்கள். எனவே, தன்னை எதிர்ப்பதற்கான காரணமென்ன என்பதற்கு விளக்கமளிக்குமாறு இரண்டு கவர்னர்களுக்கும் ஒரு தூதுவரை அனுப்பி வைத்தார்கள் அலீ (ரலி) அவர்கள்.
கூபா கவர்னராக இருந்த அபூ மூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் தன் சார்பாக திருப்திகரமான பதிலை அனுப்பி வைத்ததோடு, புதிய கலீபாவுக்குத் தான் விசுவாசமாக நடந்து கொள்வதாகவும் பதில் அனுப்பி வைத்தார்.
முஆவியா (ரலி) அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், 'எனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளுங்கள் அல்லது யுத்தத்திற்குத் தயாராகுங்கள்" என்று அலீ (ரலி) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
மிகவும் தந்திரசாலியான முஆவியா (ரலி) அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமானதொரு பதிலை அலீ (ரலி) அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அலீ (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களிடமிருந்து வந்த பதில் கடிதத்தைத் திறந்து பார்த்தார்கள். அதில், 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" - (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரைக் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்) என்பதைத் தவிர வேறொன்றும் எழுதப்படாமல் இருந்தது. அலீ (ரலி) அவர்கள் அந்தக் கடிதத்தைப் பார்த்துப் பிரமித்து நின்றார்.
கடிதத்தைக் கொண்டு வந்தவரிடம்,
இந்த கடிதத்தின் மூலம் மூஆவியா (ரலி) அவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பதென்ன? என்ற அர்த்தத்தில் அவரை நோக்கினார்.
வந்திருந்த அந்தத் தூதுவர் எழுந்திருந்து,,..
கண்ணியமிக்கவர்களே..!
நான் சிரியாவை விட்டுக் கிளம்பும் பொழுது, உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையை நினைத்து 50 ஆயிரம் மக்கள் அழுது கொண்டிருக்கக் கண்டேன். அவர்களது தாடிகள் கூட அதனால் நனைந்து விட்டிருந்தன. முந்தைய கலீபாவின் படுகொலைக்கு பழிக்குப் பழி எடுப்பது என்று அவர்கள் சூளுரைத்துக் கொண்டிருப்பதையும் கண்டேன். மேலும், பழிக்குப் பழி எடுக்காமல், தங்களது வாட்களை உறையிலிடுவதில்லை என்றும் அவர்கள் சபதம் செய்திருக்கவும் கண்டேன் என்று கூறினார்.
அலீ (ரலி) அவர்களின் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர்,
என்ன சிரியாவிலிருந்து வந்த தூதுவரே..! மதீனாவின் ராணுவத்தை சிரியாவின் ராணுவம் மிகைத்து விடும் என்றா நீர் கருதுகின்றீர்? என்று கேட்டு விட்டு, அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உதுமான் (ரலி) அவர்களின் ஆடை யூசுப் (அலை) அவர்களின் ஆடையைப் போன்றதுமல்ல, இன்னும் அவரது பிரிவுத் துயரம் யாக்கூப் (அலை) அவர்கள் கொண்ட பிரிவுத் துயரத்தைப் போன்றதுமல்ல. சிரியாவின் மக்கள் உதுமான் (ரலி) அவர்களுக்காக அழுது கொண்டிருக்கின்றார்கள் என்றால், ஈராக் மக்கள் அதே உதுமானைப் பற்றி தவறாக அல்லவா பேசிக் கொண்டிருக்கின்றார்கள்..! என்று கூற ஆரம்பித்தார்.
சிரியாவிலிருந்து வந்த தூதுவர் தந்த விளக்கம் அலீ (ரலி) அவர்களின் மனதைக் காயப்படுத்தியது. மிகவும் அதிர்ந்த நிலையில், அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்,
இறைவா! உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்காக என்னால் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கின்றேன் என்பதை நீ அறிவாய்..! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அந்தப் படுகொலைகாரர்கள் தப்பி விட்டார்கள்.
முஆவியா (ரலி) அவர்களின் பதிலும், சிரியாவின் கவர்னருமான அவரது நோக்கமும் இப்பொழுது என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட அலீ (ரலி) அவர்கள், அவருடன் யுத்தம் செய்யாமல் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி ஒன்று உருவாகப் போவதில்;லை என்ற கணிப்பிற்கு வந்தார். எனவே, யுத்தத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணித்தார்.
இப்பொழுது அலீ (ரலி) அவர்களின் மூத்த மகன் ஹஸன் (ரலி) அவர்கள் தனது தந்தையைப் பார்த்து,
'தந்தையே..! நமக்கு இந்த கலீபாப் பதவி வேண்டாம், பேசாமல் அதனை உதறித் தள்ளி விடுங்கள். உள்நாட்டு யுத்தம் ஒன்று நமக்குள் ஏற்பட்டு, அதன் மூலம் முஸ்லிம்களின் இரத்தம் இந்தப் பூமியில் சிந்துவதைத் தவிர்த்திடுங்கள், என்று தனது தந்தையைப் பார்த்துக் கெஞ்சும் குரலில் கூறினார். 'முதலும் முடிவுமாகக் கூறுகின்றேன்", 'மக்கள் அனைவரும் உங்களை ஏற்றுக் கொள்ளும் நிலையும் வேண்டுமல்லவா" என்றும் கூறினார். ஆனால், தனது மகனின் ஆலோசனையை அலீ (ரலி) அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றார்கள்.
அலீ (ரலி) அவர்களுக்கும் முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே ஆரம்பித்த இந்தப் பனிப்போர், மதீனாவில் அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கியது. சிரியாவின் கவர்னரான முஆவியா (ரலி) அவர்கள் எந்தளவு திறமையும், நுணுகி ஆய்வு செய்யும் வலிமையும் பெற்றவர் என்பதை மதீனாவின் மக்கள் நன்கு அறிவார்கள். முஆவியா (ரலி) அவர்களை வழிக்குக் கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
ஒட்டகப் போர்
முஆவியா (ரலி) அவர்களைச் சந்திப்பதற்கு முன் இன்னொரு ஆபத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அலீ (ரலி) அவர்கள் தள்ளப்பட்டார்கள். ஆம்! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பிரியத்திற்குரிய மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் அவசியம் அலீ (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டது.
ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜிற்காக மக்காவிற்குச் சென்றிருந்த நேரத்தில் தான் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலை நடந்தது. மதீனாவிற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கும் வழியில் தான் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைச் செய்தியை அவர்கள் அறிய நேரிட்டது.
இது என்ன கொடுமை..! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உவப்பிற்குரிய நகரத்தில், அதுவும் ஒரு கலிஃபாவை இப்படித்தான் படுகொலை செய்வார்களா? என்று ஆச்சரியத்தோடு வினவினார்கள். இன்னும், இந்தப் படுகொலைக்கு நிச்சயம் பாடம் புகட்டியே தீர வேண்டும் என்று அங்கிருந்தவர்களிடம் கூற ஆரம்பித்தார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களின் கோரிக்கையைச் செவிமடுத்த நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்திற்கு முன் வந்தார்கள். இவர்களில் மக்காவின் கவர்னரும் கூட அடங்குவார். இந்த நிலையில் தல்ஹா (ரலி) அவர்களும், சுபைர் (ரலி) அவர்களும் மதீனாவை அடைந்திருந்தார்கள். அங்கு என்ன நடந்தது என்பது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களுக்குத் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். மதீனாவில் உடனடி நடவடிக்கை ஒன்று அவசியப்படுவதாகவும், அவ்வாறானதொரு நடவடிக்கையை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுக்கும்பட்சத்தில், அதற்குத் தாங்கள் ஆதரவளிப்பதாகவும் அவர்கள் வாக்குறுதியும் அளித்தார்கள். இன்னும், மதீனா இருக்கும் நிலையில் நீங்கள் இங்கு வருவதற்குப் பதிலாக பஸ்ரா நகருக்குச் செல்லுங்கள், அங்கும் இதற்கான ஆதரவுகளைத் திரட்டுங்கள் என்று இருவரும் அறிவுரை கூறினார்கள். இந்த நேரத்தில் அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களும் மக்காவில் தான் இருந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்களது நோக்கத்தை வலுவடையச் செய்வதற்காக, அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு வேண்டிக் கொண்ட போதும், அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் இந்த உள்நாட்டு யுத்தத்தில் தான் தலையிட முடியாது, என்னை இந்த வம்பில் மாட்டி விட வேண்டாம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்கள்.
இப்பொழுது ஆயிஷா (ரலி) அவர்கள் பஸராவை நோக்கிச் செல்லலானார்கள். வழிநெடுகிலும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆதரவு பெருக ஆரம்பித்தது. இப்பொழுது ஆயிரம் ஆண்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் தலைமையில் பஸராவில் ஒன்று கூட ஆரம்பித்தார்கள்.
நிலைமையை உணர்ந்த பஸராவின் கவர்னர், ஆயிஷா (ரலி) அவர்கள் பஸரா வந்திருப்பதன் நோக்கமென்ன என்பதை அறிய விரும்புவதாக, ஒரு தூதுவரை ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார். அதற்கு, படுகொலை செய்யப்பட்ட உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்கான போராட்டத்தில், மக்களின் பங்கு என்னவென்பது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கவே வந்தேன் என்று கூறினார், ஆயிஷா (ரலி) அவர்கள். பின்பு, பஸராவின் தூதுவர், தல்ஹா (ரலி) மற்றும் சுபைர் (ரலி) அவர்களிடமும் சென்று இதே கேள்வியைக் கேட்டார்.
உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குப் பழி எடுக்கவே இங்கு வந்தோம் என்ற பதிலைக் கூறினார்கள்.
'நீங்கள் அலீ (ரலி) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் அல்லவா!" என்று அந்தத் தூதுவர் திரும்பக் கேட்டார்.
அந்த உறுதிப் பிரமாணங்கள் யாவும் வாளின் முனையின் கீழ் வைத்து எடுக்கப்பட்டது. இருப்பினும், உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குச் சரியான நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், அல்லது அதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்பட்சத்தில், நாங்கள் அவருக்குக் கட்டுப்படவே விரும்புகின்றோம் என்று கூறினார்கள்.
இப்பொழுது, அலீ (ரலி) அவர்களிடமிருந்து உதவி வரும் வரை தாமதித்த பஸராவின் கவர்னர், நகருக்கு வெளியே படையைத் திரட்டிக் கொண்டு ஆயிஷா (ரலி) அவர்களை எதிர்ப்பதற்காகத் தயாராகி விட்டார். இப்பொழுது, இரண்டு படைகளும் நேருக்கு நேராக நின்று கொண்டு, சமிக்ஞைக்காகக் காத்துக் கொண்டிருந்தன.
போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக தனக்கு எதிராக நின்று கொண்டிருந்த படை வீரர்களிடம் உருக்கமான முறையில் ஒரு சிறிய உரை ஒன்றை ஆயிஷா (ரலி) அவர்கள் ஆற்றினார்கள்.
கலீபா உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களைத் தண்டிக்காமல் விட்டு விடுவதா? என்று எதிரே நின்று கொண்டிருந்த வீரர்களைப் பார்த்துக் கேட்க ஆரம்பித்தவுடன், பஸராவின் ராணுவத்துடன் வந்திருந்த வீரர்களில் பாதிப்பேர் இப்பொழுது, ஆயிஷா (ரலி) அவர்களின் படையோடு சேர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.
போர் ஆரம்பமாகியது. மாலை வரை நடந்த போர் முடிவுக்கு வந்து, பின் மறு நாளும் ஆரம்பமாகியது. அன்றைய தினம் மதிய வேளையில் இரு தரப்பும் சமாதானமான முடிவொன்றை எடுப்பது குறித்த முடிவுக்கு வந்தனர். இன்னும் மதீனாவிற்கு ஒருவரை அனுப்புவது என்றும், அவர் தல்ஹா (ரலி) அவர்களும், சுபைர் (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர்களிடம் விரும்பி பைஅத் - உறுதிப் பிரமாணம் செய்தார்களா? அல்லது வற்புறுத்தலின் பேரில் அவர்களிடம் பைஅத் பெறப்பட்டதா? என்பதை அறிந்து வருவது என முடிவாகியது.
இதன் அடிப்படையில், இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் விரும்பி பைஅத் செய்திருக்கும்பட்சத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் பஸராவை விட்டும் திரும்பிச் சென்று விடுவது என்றும், அவ்வாறன்றி, இருவரும் வாள் முனையின் கீழ் வற்புறுத்தலின் காரணமாக பைஅத் செய்திருப்பார்களென்றால், பஸராவின் கவர்னர் பதவி விலகி, பஸராவின் பொறுப்பை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கையளிப்பது என்ற முடிவெடுக்கப்பட்டது.
இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்கும் நடுநிலையாளராக, பஸராவின் தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டார். அவரை மதீனாவிற்கு அனுப்பி உண்மை நிலை என்னவென்பதை அறிந்து வருமாறு அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டது. இவர் கொண்டு வரும் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்வது என்றும் இறுதி முடிவெடுக்கப்பட்டது.
எனவே, பஸராவின் தலைமை நீதிபதியாகக் கடமையாற்றிய கஅப் பின் தவ்ர் என்பவர், மதீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர், மதீனாவை வெள்ளிக் கிழமையன்று அடைந்தார். அவர் நேரடியாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிக்குச் சென்று, மக்களின் முன்னிலையில் நின்று கொண்டு,
என்னருமை மக்களே..! என்னை பஸராவின் மக்கள் இங்கே அனுப்பி வைத்திருக்கின்றார்கள். நான் வந்ததன் நோக்கம் என்னவெனில், தல்ஹா (ரலி) அவர்களும், சுபைர் (ரலி) அவர்களும் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் பைஅத் பெறப்பட்டார்களா? அல்லது அவர்களது விருப்பத்திற்கு மாற்றமாக அச்சுறுத்தலின் அடிப்படையில் வலுக்கட்டாயமாகப் பைஅத் பெற்பட்டார்களா? என்பதை அறிந்து வருவதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டேன் என்று கூறினார்கள்.
அப்பொழுது,
அல்லாஹ்வின் மீது சத்தியமாக..! 'வாளின் முனையின் கீழ் வைத்துத் தான் பைஅத் பெறப்பட்டது" என்று உஸா பின் ஸைத் (ரலி) அவர்கள் எழுந்திருந்து கூறினார்கள். உஸாமா (ரலி) அவர்களின் கருத்திற்கு வலுச் சேர்க்குமுகமாக, மிகவும் பிரபலமான பல நபித்தோழர்கள் எழுந்திருந்து, உஸாமா (ரலி) அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மையே என்று கூறினார்கள். இப்பொழுது, தல்ஹா (ரலி) அவர்களும், சுபைர் (ரலி) அவர்களும் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை அறிந்து கொண்ட பஸராவின் நீதிபதி இப்பொழுது, பஸராவை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார்.
ஆயிஷா (ரலி) பஷராவைக் கைப்பற்றுதல்
பஷராவில் நடந்து வருபவைகள் பற்றி அலீ (ரலி) அவர்கள் கேள்விப்படுகின்றார்கள். அதனையடுத்து, பஷராவை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று கவர்னருக்குக்கு எழுதிய கடிதத்தில் அலீ (ரலி) அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.
இந்த நிலையில், மதீனாவிற்கு சென்ற நீதிபதி பஷராவிற்குத் திரும்பி வருகின்றார். அவர், தல்ஹா (ரலி) மற்றும ஜுபைர் (ரலி) அவர்கள் இருவரும் கூறிய அனைத்தும் உண்மையே என்று கூறுகின்றார். இதனையடுத்து, தல்ஹா (ரலி) அவர்களும், ஜுபைர் (ரலி) அவர்களும் கவர்னரைப் பார்த்து, நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், பஷராவை எங்கள் பொறுப்பில் ஒப்படையுங்கள் என்று கேட்கும் பொழுது,
இப்பொழுது நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கை விட, கலீபா அவர்களின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலையில் உள்ளேன் என்று அலீ (ரலி) அவர்கள் இட்ட கட்டளையை அவர்களிடம் எடுத்துக் கூறுகின்றார். எனவே, நான் கலீபா அவர்களின் உத்தரவினை மதித்து இந்த நகரைப் பாதுகாக்கும் நடவடிக்கையை எடுக்கும் நிலையில் உள்ளேன் என்று கூறுகின்றார். இருப்பினும், பஷரா கைப்பற்றப்படுகின்றது, கவர்னர் சிறைபிடிக்கப்படுகின்றார்.
பஷரா ஹிஜ்ரி 36, ரபிய்யுல் ஆகிர், 4 ம் நாள் கைப்பற்றப்படுகின்றது. பஷராவை கைப்பற்றப்பட்டவுடன், தல்ஹா (ரலி) அவர்களும், ஜுபைர் (ரலி) அவர்களும் உதுமான் (ரலி) அவர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக இறங்கி விடுகின்றார்கள். நூற்றுக்கணக்கான ஆண்கள் சுற்றி வளைக்கப்பட்டு, அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். சிலர் கைது செய்யப்பட்டு, விசாரணையும் முடுக்கி விடுப்பட்டது. அதில் பலர் இந்தப் படுகொலையில் சந்தப்பட்டிருப்பது தெரிந்ததும், அவர்களை விசாரணைக்குப் பின் கொலை செய்யவும்படுகின்றார்கள். இப்பொழுது பஷரா நகரமே திகில் பிடித்த நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது. பஷரா கைப்பற்றப்பட்ட செய்தியை கடிதம் மூலமாக நாட்டின் பல பாகங்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது. தல்ஹா (ரலி) அவர்களும், ஜுபைர் (ரலி) அவர்களும் அனுப்பி வைத்த செய்தியில், உதுமான் (ரலி) அவர்களைப் படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது இறைவனின் தண்டனை எவ்வாறு இறங்கியிருக்கின்றது, அதற்கான தண்டனையை அவர்கள் பஷராவில் பெற்றுக் கொண்டார்கள் என்றும் குறிப்பிட்டு அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்கள்.
அலி (ரலி) தோழர்களும்
பஷராவில் நடந்து கொண்டிருப்பவைகள் அத்தனையும் அலீ (ரலி) அவர்களைக் கவலை கொள்ளச் செய்தன. இப்பொழுது முஆவியா (ரலி) அவர்களை அவர்களின் போக்கில் விட்டு விட்டு, முதலில் நாம் ஈராக்கின் மீது முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்ற முடிவை அலீ (ரலி) அவர்கள் எடுக்கின்றார்கள்.
மதீனாவின் இளவல்களை அழைத்தார் அலீ (ரலி) அவர்கள். மதீனாவின் மக்களே..! வாருங்கள் என் பின்னால் அணி திரண்டு.
ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களின் விஷயத்தில் அலீ (ரலி) அவர்கள் உதவி செய்யப்பட முடியாத நிலையில் இருந்தார். மதீனத்து மக்கள் தன் பின்னால் அணி திரள்வார்கள் என எதிர்பார்த்த அலீ (ரலி) அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மிகச் சிலரே போராட முன் வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பின்னால் இறைநிராகரிப்பிற்கு எதிராக தங்களது உயிரையும், பொருளையும் துச்சமாக மதித்து அணி திரண்ட அந்த இளவல்கள் இப்பொழுது, இது எங்களால் தாங்கவியலாத பளுவாக இருக்கின்றது அமீருல் முஃமினீன் அவர்களே..! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவி.. இறைநம்பிக்கையார்களின் தாய்..! அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை எதிர்த்தா எங்களைக் களமிறங்கச் சொல்கின்றீர்கள்? மன்னித்து விடுங்கள் என்று ஒதுங்க ஆரம்பித்தார்கள்.
ஈரானை வென்றெடுத்த வேங்கை, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.
இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்.. அமீருல் முஃமினீன் அவர்களே..!
நம்பிக்கையார்களையும், நம்பிக்கையற்றோர்களையும் பிரித்து இனங்காணக் கூடிய வாள் ஒன்றை எனக்குத் தாருங்கள். அத்தகைய வாள் ஒன்றை என் கையில் தருவீர்கள் என்று சொன்னால்..., உங்கள் பின்னால் நின்று நான் போர் செய்யக் காத்திருக்கின்றேன். அத்தகைய வாள் ஒன்றை எனக்குப் பெற்றுத்தர இயலாதபட்சத்தில்...., தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்..!
அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்..!
அல்லாஹ்வின் திருப்பெயரால் கேட்டுக் கொள்கின்றேன்..! எனது மனது விரும்பாத ஒன்றை என்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்க வேண்டாம்..!
முஹம்மது பின் முஸ்லிமா (ரலி) அவர்கள் கூறினார்கள்..!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருக்கின்றார்கள்..! முஸ்லிமாவே..! உனது வாளை நீ என்றைக்கும் இறைநிராகரிப்பாளர்களை எதிர்த்துப் பயன்படுத்துவீராக..! முஸ்லிம்களை எதிர்த்துப் போர் புரியும் நிலை ஏற்பட்டால், அந்த வாளை உடைத்து விடும்..! என்று எனக்கு அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். எனவே, நான் ஏற்கனவே என்னுடைய வாளை சுக்குநூறாக உடைத்தெறிந்து விட்டேன், அமீருல் முஃமினீன் அவர்களே..!
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்..!
''வணங்கத்தக்க இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவன் இல்லை"", என்று சான்று பகர்ந்திருக்கின்ற ஒரு மனிதரை எதிர்த்து நான் போர் செய்வதில்லை என்று சத்தியம் செய்திருக்கின்றேன், என்னை மன்னித்து விடுங்கள்..! அமீருல் முஃமினீன் அவர்களே...!
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நிழலில் நின்று போராடிய இந்த வேங்கைகளின் கூற்றைக் கேட்ட, உஸ்தர் என்பவர் கூறினார்.., உங்களது சொல்லுக்குக் கட்டுப்படாத இவர்களை சிறையில் தள்ளுங்கள்...!
'இல்லை", யாருடைய விருப்பத்திற்கும் எதிராகவும், என்னுடைய பலத்தைப் பிரயோகிக்க விரும்பவில்லை, என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
கடைசிப் போர்
சிப்பீன் போர்
கூஃபாவிலிருந்து வந்த உதவி
ஹிஜ்ரி 36 ரபிய்யுல் அவ்வல் மாதம் அலீ (ரலி) அவர்கள் ஈராக்கை நோக்கிப் புறப்பட்டார்கள். எதிர்தரப்பினர் பஷராவை அண்மிக்கு முன்பாகவே நாம் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்பதே அலீ (ரலி) அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் நீண்ட பயணம், அதிகப்படியான நேரம் எடுத்துக் கொண்டதால் குறித்த காலக்கெடுவுக்குள் போய்ச் சேர இயலவில்லை. தி கார் என்ற இடத்தை அடைந்த பொழுது, பஷரா நகரம் ஆயிஷா (ரலி) அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக தகவல் வருகின்றது. எனவே, அங்கேயே அலீ (ரலி) அவர்கள் தங்கி விடுகின்றார்கள்.
கூஃபாவின் கவர்னராக இருந்த அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்களுக்கு, பலமுறை உதவி கேட்டுப் பல முறை செய்தி அனுப்பி வைத்தார்கள் அலீ (ரலி) அவர்கள். உள்நாட்டு யுத்தம் ஒன்று நடக்கவிருப்பதை அபூ மூஸா (ரலி) அவர்கள் விரும்பவில்லை. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமினுடைய தொண்டைக்குழியை அறுப்பதா? என்று அவர் இந்த உள்நாட்டு யுத்தத்தை வெறுக்க ஆரம்பித்தார். இந்தப் பிரச்னையிலிருந்து ஒதுங்கி இருக்கவே அவர் விரும்பினார். தன் நாட்டு மக்களுக்கும் அதனையே அறிவுரையாகவும் வழங்கினார்.
ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், அலீ (ரலி) அவர்களுக்குமிடையே நடக்கும் இந்தப் போரில் நாம் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்த அபூ மூஸா (ரலி) அவர்கள், தன் நாட்டு மக்களுக்கும் அவ்வாறே இருந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
இறுதியாக, அலீ (ரலி) அவர்கள் தனது மகன் ஹஸன் (ரலி) அவர்களை கூஃபாவிற்கே அனுப்பி வைத்தார்கள். ஹஸன் (ரலி) அவர்கள் கூஃபா வை அடைந்த நேரத்தில், அபூ மூஸா (ரலி) அவர்கள் அங்கிருந்த பள்ளிவாசலில் மக்களிடம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அந்த உரையில், முஸ்லிம்களுக்கிடையே நடக்கும் இந்த உள்நாட்டு யுத்தத்தில் இருந்து, முற்றிலும் தவிர்ந்து இருந்து கொள்ளுமாறு அறிவுரை கூறிக் கொண்டிருந்தார். அபூ மூஸா (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தி முடிந்ததும், ஹஸன் (ரலி) அவர்கள் மேடை மீது ஏறி, உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள்.
அந்த உரையில், தன்னுடைய தந்தை எந்தளவு நேர்மையான கலீஃபா என்பதனையும், தல்ஹா (ரலி) அவர்களும், ஜுபைர் (ரலி) அவர்களும் தந்த வாக்குறுதியை மீறி நடந்து கொண்டிருக்கும் நிலையையும், இந்த நிலையில், நீதியை நிலைநாட்டுவதற்காக கலீஃபா விற்கு உதவுவது பொதுமக்களின் கடமையாக இருக்கின்றது என்பதனையும், தனது உரையில் ஹஸன் (ரலி) அவர்கள் விளக்கிக் கூற ஆரம்பித்தார்கள்.
ஹஸன் (ரலி) அவர்களின் உரை அங்கே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கூஃபா வின் முன்னணித் தலைவர்கள் ஒருவர் எழுந்திருந்து, கூஃபாவின் மக்களே..! நம்முடைய கவர்னருடைய கூற்று, சரிதான். ஆனால், தேசத்தின் ஒற்றுமை என்பதும் அவசியமானதொன்று. அந்த ஒருமைப்பாடு இல்லையெனில், அமைதியும், நீதியும் இல்லாமல் போய் விடும். அலீ (ரலி) அவர்கள் கலீஃபா வாக, ஆட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர். அவர் நீதியை நிலைநாட்டுவதற்காக உங்களுடைய உதவியைக் கேட்டிருக்கின்றார். அவரது கோரிக்கைக்கு உங்களால் முடிந்த அளவு உதவி வழங்க வேண்டியது கடமையாகும் என்று உரையாற்றி முடிக்கின்றார்.
இவரது இந்த உரையை அடுத்து, இதே போன்ற கருத்தை முன் வைத்து இன்னும் சில தலைவர்கள் பேச ஆரம்பிக்கின்றார்கள். இப்பொழுது மக்களிடையே ஒருவித உணர்ச்சிகரமான நிலை நிலவ ஆரம்பிக்கின்றது. அந்த இடத்திலேயே ஒன்பதனாயிரம் பேர் அலி (ரலி) அவர்களின் படையில் சேர்ந்து கொள்வதற்காகத் திரண்டு விடுகின்றார்கள்.
இயன்றவரைக்கும், அதிகபட்ச முயற்சியாக நமக்கிடையே இரத்தம் சிந்துவதை நாம் தவிர்ந்து கொள்ள முயற்சி செய்வோம் என்று கூஃபாவின் மக்களுக்கு அலீ (ரலி) அவர்கள் வாக்குறுதியும் அளிக்கின்றார்கள். போர் செய்வது தவிர்க்கவியலாத நிலைக்கு தள்ளபட்டாலும், அதனைத் தவிர்த்துக் கொள்ள நாம் இயன்ற வரைக்கும் முயற்சிப்போம் என்றும் அலீ (ரலி) அவர்கள் தன்பின்னால் அணி திரண்ட மக்களுக்கு வாக்குறுதி அளிக்கின்றார்கள்.
அலீ (ரலி) அவர்களின் இந்த வாக்குறுதியானது, கூஃபாவின் மக்களின் இதயத்தைக் கவர்ந்தது, கலீஃபா அவர்கள் நியயமான காரியங்களுக்காகத் தான் இங்கு வந்திருக்கின்றார்கள் என்று நல்லபிப்பராயத்தையும் அலீ (ரலி) அவர்களின் மீது தோற்றுவித்தது. இது அலீ (ரலி) அவர்களுக்கு ஆற்றலையும், இன்னும் கௌரவத்தையும் பெற்றுத் தந்தது.