அலீ அவர்களே..! கவனம் தேவை. அவன் அப்தூத்..! இது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையாக இருந்தது.
நல்லது, அவனைப் பற்றி நான் அறிவேன், இது அலீ (ரலி) அவர்களது பதிலாக இருந்தது.
சற்றுச் சில நிமிடங்களில் அலீ (ரலி) அவர்கள், அந்த எதிரியினுடைய கழுத்தை அவனது உடலிலிருந்து துண்டித்தார்கள். அவன் சாய்ந்த பனை மரம் போல விழுந்தான்.
இன்னும் மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்த பனூ குரைளா என்ற யூதக் குலத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வந்த காரணத்தாலும், இஸ்லாத்தின் எதிரிகளுக்கு உதவிக்கரம் நீட்டி வந்ததாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் முஸ்லிம்களின் நிலை இன்னும் மோசமாக மாறி விடும் என்ற நிலையில், அவர்களே தங்களது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் நிலை உருவாகியது. இறுதியாக, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முடிவெடுத்தார்கள். யூதர்களது வலுவான கோட்டைகளை முற்றுகையிட்டார்கள், அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள், இன்னும் அவர்களது கோட்டைகளிலேயே அன்றைய தொழுகையை நடத்தினார்கள்.
இன்னும் கைபர் என்ற இடத்தில் யூதர்களது வலுவான கோட்டைகள் தொடர்ச்சியாக இருந்தன. இந்தக் கோட்டைகள் இருந்து வருவது என்றைக்கும் முஸ்லிம்களுக்கு ஆபத்துக்களை விளைவிக்கக் கூடியதாக இருந்தது. முஸ்லிம்களை அச்சுறுத்தும் விதத்தில் அமைந்துள்ள அந்தக் கோட்டைகளை எதிர்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது படைகளை அனுப்ப முடிவு செய்தார்கள். முஸ்லிம்களை எதிர்த்து, கடுமையான தடைகளை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள் யூதர்கள். இருப்பினும்,அவர்களது கோட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்களின் வசம் வீழ்ந்து கொண்டிருந்தது. இருப்பினும், 'குமாஸ்" என்ற கோட்டையை மட்டும் முஸ்லிம்களால் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்தது. அந்தக் கோட்டையின் தளபதியாக இருந்த மர்ஹப் என்பவனின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக முஸ்லிம்களால் அந்தக் கோட்டையை ஒன்றும் செய்ய இயலாமல் இருந்தது. இந்த நிலையில், இறைத்தூதர் (ஸல்) அவாகள் கூறினார்கள், ''நாளைக்கு நான் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மிகவும் நேசிக்கக் கூடிய புதியதொரு தளபதியை நியமிக்கப் போகின்றேன். அல்லாஹ் அவருக்கு வெற்றியை அருளுவான்"" என்று கூறினார்கள்.
யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், மறுநாள் காலையும் புலர்ந்தது. அடுத்த நாள் காலையில், மக்கள் அனைவரும் எதிர்பார்த்த அந்த வீரரை மக்களுக்கு அறிமுகம் செய்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய போரின் தலைமைப் பொறுப்பை ''அலீ (ரலி) அவர்களிடம் வழங்கினார்கள். அன்றைய தினம் நடந்த போரில் மர்ஹப் ம் அவனது சகோதரனும் கொல்லப்பட்டார்கள், கோட்டை முஸ்லிம்களின் வசம் வீழ்ந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பும் நிறைவேறியது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..!
ஹ{தைபிய்யா என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கையை மக்கத்துக் குறைஷிகளுடன் முஸ்லிம்கள் முதன் முதல் ஏற்படுத்தின் கொண்ட போது, அதன் எழுத்தராக அலீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்த உடன்படிக்கையின் வாசகங்களைக் கூறக் கூற, அலீ (ரலி) அவர்கள் எழுதிக் கொண்டு வந்தார்கள். குறைஷிகளின் தூதர்கள் அந்த உடன்படிக்கையின் எழுதப்பட்ட வாசகமான, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயருக்கு முன்னால், அல்லாஹவின் தூதர் என்று எழுதப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அதற்குப் பதிலாக முஹம்மது பின் அப்துல்லாஹ் என்று எழுதும்படி வற்புறுத்தினர். அவ்வாறு மாற்றி எழுதுவதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இருப்பினும் எழுதப்பட்ட அந்த, ''அல்லாஹ்வின் தூதர்"" என்ற வார்த்தையை தனது கரங்களால் அழிப்பதற்கு அலீ (ரலி) மறுத்து விட்டார்கள். அதன் பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களே.. தனது கரங்களால் அந்த வார்த்தையை அழித்தார்கள்.
மக்காவின் வெற்றியின் பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழையும் பொழுது முஸ்லிம்களின் கொடியை அலீ (ரலி) அவர்களின் கரங்களில் தான் கொடுத்தார்கள்.
உஹதுப் போரிலும், ஹ{னைன் போரிலும் முஸ்லிம்களின் தரப்பில் சில சலனங்கள் ஏற்பட்ட பொழுது, அந்த சலனங்களுக்கு இடம் கொடாமல், துணிந்த நின்று போர் செய்த ஒரு சில பெருமக்களில் அலீ (ரலி) அவர்களும் ஒருவராவார்.
கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்
உதுமான் (ரலி) அவர்கள் இறந்த பிறகு, கலீபாவாக யாரையும் தேர்ந்தெடுக்கப்படாமலேயே மூன்று நாட்கள் கழிந்தன. இப்பொழுது மதீனா முழுவதும் கலவரக்காரர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. காஃப்கி என்ற எகிப்தினைச் சேர்ந்த இவர் தான் கலவரத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார், இப்பொழுது இவரே தலைமை தாங்கி இமாமாக நின்று கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். இந்த கொடூரமான மனித இனப் படுகொலையானது மதீனாவில் நடந்து கொண்டிருந்த இந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமான நபித்தோழர்கள் மதீனாவை விட்டும் வெளியேறிச் சென்று விட்டார்கள். மதீனாவை விட்டும் வெளிச் செல்லாமல் தங்கி இருந்தவர்களோ, எந்தவித உதவியுமின்றி, இதனைத் தடுத்த நிறுத்த சக்தியற்றவர்களாக இருந்தார்கள். இன்னும், இவர்கள் தங்கள் வீடுகளுக்குள் இருந்து கொண்டு, கலவரக்காரர்கள் தாங்கள் நினைத்ததை சாதித்து முடித்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டு, அமைதி காத்தார்கள்.
இந்த கலவரக்காரர்கள் தான் அலீ (ரலி) அவர்களின் பெயரை கலீபா பதவிக்கு முன்மொழிந்தார்கள். இன்னும் அவரையே கலீபாவாக பதவியேற்றுக் கொள்ளும்படி வேண்டி நின்றார்கள். அலி (ரலி) அவர்களோ முதலில் அவர்களது இந்தக் கோரிக்கையை மறுத்தார்கள். ஆனால், இந்தக் கலவரச் சூழலை யாராவது ஒருவர் முன்னின்று அமைதிக்குக் கொண்டு வர வேண்டிய அவசியமும் அங்கு நிலவியது. தலைநகரத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்ற அத்தனையும் இஸ்லாத்திற்கு முரணாகவே நடந்து கொண்டிருந்தன. இப்பொழுது அலி (ரலி) அவர்கள், மதீனாவில் எஞ்சியிருந்த நபித்தோழர்களை அழைத்து கலந்தாலோசனை நடத்த ஆரம்பித்தார்கள்.
அலீ (ரலி) அவர்களே..!
கலவரச் சூழல் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள், இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஏதேனும் செய்யுங்கள், மக்களுக்கு அமைதி தேவையாக இருக்கின்றது என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.
எனவே, நிலைமையின் பாரதூரத்தை எடை போட்டுப் பார்த்த அலீ (ரலி) அவர்கள், முஸ்லிம்களிடையே ஏற்பட்டு விட்ட இந்த விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவராக, கலீபா பதவியைத் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்கள்.
இப்பொழுது மதீனாவில் வசித்த அனைவரும், அலீ (ரலி) அவர்களிடம் வந்து தங்களது பைஅத் என்ற வாக்குறுதியை அளித்தார்கள். மாலிக் உஸ்தர் என்பவர் தான் இந்த வாக்குறுதி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.
தல்ஹா (ரலி) மற்றும் ஜுபைர் (ரலி) ஆகிய இருவரும், அப்பொழுது மதீனாவில் இருந்த முக்கியமான நபித்தோழர்களாவார்கள். தனக்குப் பின் கலீபாவாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று உமர் (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவில் இந்த இருவரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த இருவருடைய சம்மதத்தையும், இன்னும் இந்த இருவரில் யாருக்காவது கலீபாவாக ஆக விரும்பம் இருக்கும்பட்சத்தில் அதனையும் முயற்சி செய்து பார்த்துவிடுவது என்ற நோக்கத்தில் இருவரையும் அழைத்து வர ஆள் அனுப்பி வைத்தார்கள்.
இன்னும் இவர்களில் எவரொருவராவது கலீஃபாவாக ஆக விரும்பினார் எனில், அவரிடம் நான் எனது வாக்குறுதியை அளிக்கத் தயராக இருக்கின்றேன் என்றும் அலீ (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.
ஆனால் இந்த இருவரும், இந்த மிகச் சுமையான பொறுப்பை ஏற்பதிலிருந்தும் விலகிக் கொண்டனர். அப்படியானால், என்னிடம் வாக்குறுதி அளியுங்கள் - பைஅத் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார், அலீ (ரலி) அவர்கள்.
சம்மதமின்மை காரணமாக ஜுபைர் (ரலி) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்பொழுது, அங்கிருந்த மாலிக் உஸ்தர், கூறினார் :
ஜுபைரே..! அலீ (ரலி) அவர்களிடம் பைஅத் செய்கின்றீர்களா? எனத் தனது வாளை உருவியவாறே.., இல்லை உங்களது தலையைத் துண்டாடட்டுமா? எனக் கேட்டார்.
பின், ஜுபைர் (ரலி) அவர்கள் தனது வாக்குறுதியை அளித்தார்.
அடுத்தது, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது முறை, அவரும் அழைக்கப்பட்டார், உமர் (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட அறுவரில் இவரும் ஒருவர்.
என்னைப் பற்றிப் பயப்பட வேண்டாம், இத்தனை நபர்களும் உங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கும் பொழுது, நான் மறுக்க மாட்டேன், நானும் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கின்றேன் என்றார்.
அடுத்தது, அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களது முறை. அவரும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் பதிலையே கூறி, வாக்குறுதி அளித்தார்.
யாராவது ஒருவர் உங்களுக்காக பிணையாளாக வந்து வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றார் அலீ (ரலி).
எனக்காக யாரையும் பிணையாளாகத் தர வேண்டியதில்லை. பதில் வந்தது.
மாலிக் உஸ்தர் எழுந்தார். அவரை என்னிடம் விடுங்கள், தலையைக் கொய்து விடுகின்றேன்.
வேண்டாம், வேண்டாம்..! என்று கூறிய அலீ (ரலி) அவர்கள், அவருக்கு நானே பிணையாளாக இருந்து கொள்கின்றேன் என்று கூறினார்கள்.
இன்னும் முன்னணி நபித்தோழர்கள் பலர் அலீ (ரலி) அவர்களுக்கு வாக்குறுதி வழங்கவில்லை. உமைய்யா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிரியாவை நோக்கிச் சென்று விட்டார்கள். இரத்தம் தோய்ந்த உதுமான் (ரலி) அவர்களின் ஆடைகளைத் தங்களுடனேயே எடுத்துச் சென்று விட்டதல்லாமல், உதுமான் (ரலி) அவர்களின் மனைவியாகிய நைலா (ரலி) அவர்களின் துண்டிக்கப்பட்ட விரல்களையும் எடுத்துச் சென்று விட்டார்கள்.
முதல் உரை
அலீ (ரலி) அவர்கள் கலீபாவாகப் பதவியேற்ற பின்பு முதன்முதலாக உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள். அவர்களது உரை தெளிவாகவும், கடுமையாகவும் இருந்தது.
கஃபாவும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் புனிதமானவை. முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். ஒரு முஸ்லிம் இன்னொரு மனிதரைத் தனது நாவினாலோ அல்லது செயல்களினாலோ துன்பம் விளைவிக்க மாட்டார். உங்களது செயல்பாடுகளில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, உயிர் கொடுத்து எழுப்பப்படக் கூடிய அந்த மறுமை நாளில் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றீர்கள், மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்கினங்களிடம் கூட உங்களது செயல்பாடுகளைப் பேணிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். அவனது கட்டளைகளைப் புறக்கணித்து விடாதீர்கள். நன்மையைச் செய்யுங்கள், தீமைகளில் இருந்து விலகியிருங்கள்.
தான் செல்லக் கூடிய பாதை மிகவும் கடினமானது என்பதை அலீ (ரலி) அவர்கள் நன்கறிந்தவர்களாக இருந்தார்கள். சட்டம் ஒழுங்கு பேணப்படாத அந்த நேரத்தில், அதனை மீட்டுக் கொண்டு வர வேண்டியதிருந்தது. இன்னும் அதற்காகத் தொடர்ந்து இடைவிடாது பாடுபட வேண்டி இருந்தது, அதற்காகப் பொறுமையுடன் பணியாற்ற வேண்டி இருந்தது. அலீ (ரலி) அவர்கள், இந்த விஷயத்தில் மக்கள் தனக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்.
பிரச்னைகளைச் சந்தித்தல்
அலீ (ரலி) அவர்களது முதல் உரை முடிந்தவுடன், நபித்தோழர்களில் சிலர் அலீ (ரலி), ஜுபைர் (ரலி) மற்றும் தல்ஹா (ரலி) ஆகியோரைச் சந்தித்தார்கள்.
நீங்கள் இப்பொழுது கலீபாவாகப் பதவி ஏற்றிருக்கின்றீர்கள் என்று வந்தவர்களில் ஒருவர் கூறி விட்டு, நீங்கள் செய்ய வேண்டிய முதல் பணி, இஸ்லாமிய ஷரீஆ வை நிலைநாட்ட வேண்டும் என்றார். இன்னும் உதுமான் (ரலி) அவர்களைப் படுகொலை செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் இதில் தவறு செய்ய மாட்டீர்கள் என்பதால் தான் நாங்கள், உங்களுக்கு எங்களது வாக்குறுதியைத் தந்தோம் என்று கூறினார்கள்.
உதுமான் (ரலி) அவர்களைப் படுகொலை செய்தவர்களைத் தண்டிக்காமல் நான் விட்டு விடப் போவதில்லை. ஆனால் அதற்கு சற்று கால அவகாசம் தேவை, சற்றுப் பொறுத்திருங்கள் என்று கேட்டுக் கொண்டார் அலீ (ரலி) அவர்கள்.
மதீனாவின் நிலமை இன்னும் சீராகவில்லை. கலவரக்காரர்கள் இன்னும் பலத்துடன் மதீனாவில் உலா வந்து கொண்டிருக்கின்றார்கள்
நாம் கூட அவர்களது அச்சுறுத்தல்களின் கீழ் தான் இருந்து வருகின்றோம் என்று கூறினார். இன்னும் சொல்லப் போனால், என்னுடைய நிலமையே ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றது. எனவே, தயவு செய்து பொறுமையோடிருங்கள். சூழ்நிலைகள் நமக்கு சாதகமானதுடன், நிச்சயமாக, குற்றவாளிகளை நான் தண்டிப்பேன், அது என்னுடைய கடமையும் கூட என்று கூறினார், அலீ (ரலி) அவர்கள்.
அலீ (ரலி) அவர்களின் பதில் வந்திருந்தோருக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. அவர்களில் சிலர், அலீ (ரலி) அவர்கள், பிரச்னையில் இருந்து ஒதுங்க நினைக்கின்றார் என்றே கருதினார்கள்.
அலீ (ரலி) அவர்களே நீங்கள் விபரம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்,
மக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது, உதுமான் (ரலி) அவர்களைப் படுகொலை செய்தவர்களை நீங்கள் தண்டிக்கவில்லை என்று சொன்னால், மக்களே சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, செயல்பட ஆரம்பித்து விடுவார்கள், என்று கூறினார்கள்.
இப்பொழுது, என்ன நடக்கும் என்பதை கலவரக்காரர்களுக்கு உணர்த்த வேண்டும். கலவரத்தை நிறுத்தவில்லை எனில், அலீ (ரலி) அவர்கள் நிச்சயம் நம்மைத் தண்டிப்பார் என்பதை அவர்கள் உணர வேண்டும். மதீனாவில் நிரந்தரமாகக் குழப்பம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். இதற்காகவே ஒரு குழுவினர் மற்ற குழுவினரிடம் இணக்கமாகி விடாமல், குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டே வருகின்றார்கள். இன்னும் ஒவ்வொரு இடத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள். அவர்களது முழுமையான நோக்கம் என்னவெனில், மதீனாவில் உள்ள தலைவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கி, அதன் மூலம் குழப்பத்தை நீடிக்கச் செய்து, தாங்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்பதேயாகும். இதன் மூலம் தங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள நினைக்கின்றார்கள்.
அலீ (ரலி) அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்பு, தான் இன்னும் மிக மோசமாக பாதையைக் கடக்க வேண்டியதிருக்கின்றது என்பதை உணர ஆரம்பித்தார்.
தன்னை கலவரக்காரர்கள் ஏன் தேர்ந்தெடுக்க முன் வந்தார்கள் என்பதும், இன்னும் அதற்காக அவர்கள் கையாண்ட முறையையும் அலீ (ரலி) அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இன்னும் அவர்களைத் தண்டித்தே ஆக வேண்டும் என்பதிலும் அலீ (ரலி) அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதற்காக ஒட்டு மொத்த நபித்தோழர்கள் மற்றும் அனைத்து அதிகார மட்டத்தின் ஆதரவும் தனக்குத் தேவை என்பதையும் அலீ (ரலி) அவர்கள் விரும்பினார்கள். ஆனால், அவர் விரும்பியவாறு அவருக்கு முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை. எனவே, பொறுத்திருந்து நிலைமையைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் அலீ (ரலி) அவர்களுக்கு உருவானது.
ஆனால், நபித்தோழர்களோ..! உடனடி நடவடிக்கையை விரும்பினார்கள். அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் எடுக்கப்பட்டது போன்றதொரு நடவடிக்கை அவசியம் என்று விரும்பினார்கள். ஆனால், அப்போதிருந்த சூழ்நிலைக்கும், இப்பொழுது உள்ள சூழ்நிலைக்கும் உள்ள வேறுபாட்டைப் பிரித்தறியத் தவறி விட்டார்கள்.
இது தான் நபித்தோழர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்குமிடையே கருத்துவேறுபாட்டை உருவாக்கியது. தவறு செய்தவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே முன்னணி நபித்தோழர்களின் விருப்பமாக இருந்தது, அதற்கு அலீ (ரலி) அவர்களின் ஆட்டம் கண்டு கொண்டிருந்த தலைமைப் பதவி இடம் கொடுக்க மறுத்தது. எனவே, இந்தப் பிரச்னையில் சரியான முடிவெடுக்கத் திணறி நின்ற அலீ (ரலி) அவர்கள், நபித்தோழர்களுக்கு சரியான பதிலை வழங்க இயலவில்லை.
பேச்சுவார்த்தை முயற்சிகள்
உதுமான் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் யாவும், அவரைச் சுற்றி இருந்த அவரது உறவினர்களினால் விளைந்தவைகள் தான் என்பதில் அலீ (ரலி) அவர்கள் மிகவும் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார்கள். உதுமான் (ரலி) அவர்களைச் சுற்றி ஆட்சிப் பொறுப்பில் இருந்த உமையாக்களின் வாரிசுகள் தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தலையாய காரணமாக இருந்தார்கள். உதுமான் (ரலி) அவர்களின் நற்பெயரை அவர்கள், தங்களது சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சிப் பொறுப்புகளில் ஊடுறுவிக் கொண்டனர், ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டு அதனை தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டனர். இத்தகைய சுயநலக் காரர்கள் தான், உதுமான் (ரலி) அவர்களது நற்பெருக்குக் களங்கள் விளைவித்தனர். உதுமான் (ரலி) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், அவரது மரணத்திற்குப் பின் விளைந்த அமைதியற்ற நிலை, ஆகிய அனைத்தின் மூல வேர்களும் மேலே உள்ள சுயநலக்காரர்களின், சுயநலத்திலிருந்து தான் ஆரம்பமாகின்றன. எனவே, அவர்களை ஆட்சி மற்றும் அதிகாரப் பொறுப்பில் இருந்து அகற்றுவது வரை, இனி மதீனாவில் நிம்மதி திரும்பப் போவதில்லை. எனவே, பிரச்னையின் மூல வேர்களைக் களைந்தாலொழிய இந்தப் பிரச்னைக்கான சரியான தீர்வை எட்ட முடியாது என்பதில் உறுதியாக இருந்த அலீ (ரலி) அவர்கள், இப்பொழுது அதன் ஆணி வேர்களைக் களைவதற்குண்டான முயற்சியில் இறங்கினார்கள்.