முஸ்லிம் சமூதாயத்தில்02

3. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நெருக்கம்
அலீ (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வளர்ந்தார்கள். அதன் காரணமாக வாழ்க்கை பற்றியும், இன்னும் இறைநம்பிக்கை பற்றியும் அதன் அடிப்படைகள் பற்றியும் மிகவும் ஆழமான அறிவைப் பெற்றார்கள். எனவே, இது பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறும் பொழுது :

''நான் அறிவுலகத்தின் நகரம் என்றால், அலீ அதன் வாசலாவார்"" என்று கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது அலீ (ரலி) அவர்கள் தீராத அன்பு கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் கிளம்பிய அன்றைய இரவில், இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொன்று விடுவதற்கு இரத்த தாகம் எடுத்த குறைஷிகள் அவர்களது வீட்டைச் சுற்றிலும் தயாராகக் காத்திருந்தார்கள். வீட்டைச் சுற்றிலும் எங்கும் வாள்கள் பளபளத்துக் கொண்டிருந்தன. காலையில் வீட்டை விட்டு வெளியே வரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை கண்ட துண்டமாக வெட்டிக் குதறுவதற்காக அந்த மனிதக் கழுகுகள் காத்துக் கொண்டிருந்தன.

அப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அலீ (ரலி) அவர்களைப் பார்த்து, நீங்கள் எனது படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். நான் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்கின்றேன் என்று கூறினார்கள்.

மிகவும் உவகையோடு அலீ (ரலி) அவர்கள் எந்த மறுப்புமின்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படுக்கையில் படுத்துக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களை எதிரிகளின் சதித்திட்டத்திலிருந்து காத்து விட்ட நிம்மதி. அந்த நிம்மதியிலேயே அன்றைய இரவை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படுக்கையில் தூங்கிக் கழித்தார்கள்.

மறுநாள் காலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களது படுக்கையில் அலீ (ரலி) அவர்களைக் கண்ட மக்கத்துக் குறைஷிகள் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோமே என கைசேதப்பட்டனர், அலீ (ரலி) தான் தன்னுடைய உயிரைப் பணயமாக வைத்து, முஹம்மதைத் தப்பி ஓட வைத்து விட்டார் என்று உறுமிக் கொண்டனர். அலீ (ரலி) அவர்கள் இவை அத்தனையும் எந்த சலனமுமில்லாமல் எதிர்கொண்டதுடன், அலீ (ரலி) அவர்களை எதுவும் செய்யமால், அந்த இடத்தை விட்டும் அகன்றனர்.

மக்கத்துக் குறைஷிகள் தங்களது பொருட்களை பாதுகாப்பிற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமே கொடுத்து வைத்திருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவ்வளவு அவர்கள் எதிர்த்த பொழுதும், தங்களது பொருட்களை பாதுகாப்பதற்கு அவரை விட்டால் வேறு யார் இருக்கின்றார்கள் என்று நினைத்து, அவரிடம் தான் கொடுத்தும் வைத்திருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஹிஜ்ரத்திற்கு முன்பாகவே அனைத்துப் பொருட்களையும் உரியவர்களிடம் சேர்ப்பித்து விடும்படி, அலீ (ரலி) அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். அதன் பின் அலீ (ரலி) அவர்கள் மக்காவில் மூன்று நாள் தங்கி இருந்தார்கள். மக்களின் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சேர்ந்து கொள்வதற்காக மக்காவை விட்டு அலீ (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குக் கிளம்பினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அலீ (ரலி) அவர்கள் மிகவும் நெருங்கிய இரத்த உறவு முறை உடையவராக இருப்பினும், இன்னும் அதிக நெருக்கத்துடன் அலீ (ரலி) அவர்களைப் பார்க்க விரும்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது கடைசி மகளும், தனது அன்பிற்குப் பாத்திரமான மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அலீ (ரலி) அவர்கள் தனக்குக் கிடைத்த கௌரவத்தை உணர்ந்தவர்களாக நடந்து கொண்டார்கள். இன்னும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் வரைக்கு அடுத்த பெண்ணை அவர்கள் மணக்கவில்லை. அலீ (ரலி) மற்றும் ஃபாத்திமா (ரலி) தம்பதியினருக்கு ஹஸன் மற்றும் ஹ{ஸைன் என்ற இரு மகன்கள் பிறந்தனர். அவர்களை தனது சொந்த மகனைப் போல இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாசமழை பொழிந்தார்கள்.

ஹிஜ்ரி 9 ம் ஆண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரியாவை நோக்கிப் படையெடுப்பு ஒன்றை நடத்தினார்கள். அது தபூக் போர் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் படைக்குத் தலைமை தாங்கிச் செல்கின்ற காரணத்தால், அவர்கள் வரும் வரைக்கும் மதீனாவின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்துமாறு அலீ (ரலி) அவர்களைப் பணித்தார்கள். இதுவே, அலீ (ரலி) வருத்தமடையச் செய்தவற்கான வழியை வேஷதாரிகள் உண்டாக்க காரணமாக அமைந்தது.

அலீயைத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு விருப்பமில்லை என்று அந்த வேஷதாரிகள் பிரச்சாரம் செய்தார்கள்.

இந்தச் செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களது காதுகளுக்குச் சென்ற பொழுது, அலீ (ரலி) அவர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,

அலியே..! ''மூஸா (அலை) அவர்களுக்கும் ஹாரூன் (அலை) அவர்களுக்கும் இருந்த உறவு முறை போல நமது உறவு முறை இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பவில்லையா?"" என்று கேட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த வார்த்தை அலீ (ரலி) அவர்களை அன்பால் கட்டிப் போட்டது. வேஷதாரிகளின் விஷ வார்த்தைகளும் அடங்கியது.

ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு முதல் ஹஜ் நடைபெற்றது. அந்த நேரத்தில், இணைவைப்பாளர் கஃபாவில் நுழையக் கூடாது என்று இறைவன் கட்டளை விதித்தான். இந்தக் கட்டளையை ஹஜ்ஜில் மக்கள் கூடுகின்ற பொழுது தான் அறிவிக்க முடியும். அன்றைய கால வழக்கப்படி, இந்த அறிவிப்பை இறைத்தூதர் (ஸல்) அவர்களோ, அல்லது அவருக்கு நெருங்கிய உறவினர்களோ தான் செய்ய முடியும் என்றிருந்த நிலையில், இந்தப் பணிக்கு அலீ (ரலி) அவர்களை இறைத்தூதுர் (ஸல்) அவர்கள் தேர்வு செய்தார்கள். தனது சொந்த ஒட்டகமான கஸ்வாவை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து, அல்லாஹ்வின் உத்தரவை அறிவிக்கச் சொன்னார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது இறுதிக்காலத்தில் சுகவீனம் அடைந்த பொழுது, அவர்களுக்கு மிக அருகிலேயே இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்திய பொழுதும் அங்கே தான் இருந்தார்கள்.

இறைவசனங்களை எழுதக் கூடிய எழுத்தாளராகவும் அலீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் அனுப்பப்படக் கூடிய கடிதங்களை எழுதக் கூடிய எழுத்தராகவும் அலீ (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்ட 10 நன்மக்களில் அலீ (ரலி) அவர்களும் ஒருவராவார். இவருக்கு முன் ஆட்சி செலுத்திய மூன்று கலீபாக்களும் அலீ (ரலி) அவர்களிடம் நிர்வாக விஷயங்களில் ஆலோசனை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.

''அலீ (ரலி) அவர்கள் நம்மிடையே உள்ள மிகச் சிறந்த நீதிபதி"" என்று உமர் (ரலி) அவர்கள் அடிக்கடி கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அல்ல பலமுறை உமர் (ரலி) அவர்கள் மதீனாவை விட்டு வெளியே செல்ல நேர்ந்த பொழுதெல்லாம், அலீ (ரலி) அவர்களை தற்காலிக கலீபாவாக நியமித்து விட்டுச் செல்லக் கூடியவர்களாக இருந்தார்கள். ஏனெனில், கொடுக்கப்பட்ட பொறுப்பை திறம்படச் செய்யக் கூடியவர் என்று உமர் (ரலி) அவர்கள் கருதியதே காரணமாகும். உமர் (ரலி) அவர்கள் தனக்குப் பின் அலீ (ரலி) அவர்களைக் கலீபாவாக நியமனம் செய்து விட்டுப் போகாததன் காரணம் என்னவெனில், தனக்குப் பின் அலீ (ரலி) அவர்களைத் தான் மக்கள் நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்பியதே காரணமாகும்.

உதுமான் (ரலி) அவர்களது காலத்தில், அரசியல் விவகாரங்களில் சரியான நிர்வாக அமைப்பினை உருவாக்குவதற்கு அலீ (ரலி) அவர்கள் தனது வலிமையான கருத்தைப் பயன்படுத்தினார்கள். இதற்கு முன்னிருந்த கலீபாக்களும் இதே நடைமுறையைப் பின்பற்றி, ஆட்சி முறையில் தமது தோழர்களால் வழிநடத்திச் செல்லப்படக் கூடியவர்களாகத் தான் இருந்தார்கள்.

கலந்து கொண்ட போர்கள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர்களில், தபூக் போரைத் தவிர மற்ற அனைத்துப் போர்களிலும் அலீ (ரலி) அவர்கள் கலந்து கொண்டார்கள்.

பத்ருப் போரில் அலீ (ரலி) அவர்கள் கலந்து கொண்டு போரிட்ட பொழுது, அவர்களது வாள் அற்புதத்தையே நிகழ்த்தியது எனலாம். குறைஷித் தரப்பிலிருந்து மார்தட்டிக் கொண்டு களத்தில் இறங்கிய மூன்று எதிரிகளில் இருவரை அலீ (ரலி) அவர்கள் ஒருவரே கொன்று தரையில் வீழ்த்தினார்கள், அலீ (ரலி) அவர்களின் இந்த வீர விளையாட்டைப் பார்த்த எதிரிகளின் மனதில் அப்பொழுதே தோல்வி பயம் கவ்விக் கொண்டது.

உஹதுப் போர்க்களத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிக அருகில் நின்று போரிடக் கூடிய வாய்ப்பை; பெற்றார்கள். வில் வித்தை வீரர்கள் செய்த தவறின் காரணமாக அந்தப் போரில் முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. முஸ்லிம் வீரர்களின் அணிகள் கூட பயத்தின் காரணமாக, கலைந்தன. ஏன், களத்தை விட்டே ஓட்டமெடுத்தனர். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகக் கூட வதந்திகள் பரப்பப்பட்டன. இத்தகைய குழப்பமான அந்த நேரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நிலைகுலையாமல் நின்று கொண்டிருந்த ஒரு சில நபித்தோழர்களில் அலீ (ரலி) அவர்களும் ஒருவராவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது விழுந்த பலத்த அடியின் காரணமாக அவர்களது முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டது. தலைக்கவசத்தின் இரும்புப் பகாம் ஒன்று அண்ணலார் (ஸல்) அவர்களின் முகத்தில் ஊடுறுவி இருந்தது. அதனை அபுபக்கர் (ரலி) அவர்களும், தல்ஹா (ரலி) அவர்களும் பிடுங்கி எடுத்து, வேதனையைக் குறைத்தனர். அந்தக் காயத்திற்கு அலீ (ரலி) அவர்களும், பாத்திமா (ரலி) அவர்களுமே சிகிச்சை அளித்தார்கள். இந்தப் போரில் அலீ (ரலி) அவர்களுக்குக் கூட 17 இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது.

ஹிஜ்ரி 5ம் ஆண்டில், இஸ்லாத்தின் அனைத்து எதிரிகளும் முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்று திரண்டனர். மதீனாவை நோக்கி மிகப் பெரும் படையுடன் கிளம்பினர். மதீனாவைக் காக்கும் பொருட்டு மதீனாவைச் சுற்றிலும் அகழ் ஒன்றை இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் தோண்டினார்கள். ஒருநாள் எதிரிகளின் தரப்பிலிருந்து, அரேபியாவின் மிகப் பிரசித்தி பெற்ற வீரனான அப்து என்பவன், அந்த அகழியை குதிரையில் இருந்தவாறே தாண்டி விட்டான். அவனை எதிர்த்து நிற்பதற்கு அனைவரும் பயந்தனர், அவனருகே செல்வதற்குக் கூட முஸ்லிம்கள் பயந்து கொண்டிருந்த பொழுது, அவனை எதிர்த்துப் போர் புரிவதற்கு அலீ (ரலி) அவர்கள் முன் வந்தார்கள்.