1வேதங்கள் இறக்கப்பட்டதன் நோக்கம்
உலகில் மனிதர்களுக்கு நேர்வழியைக் காண்பிப்பதற்காக அல்லாஹ் வேதங்களை இறக்கினான். அல்லாஹ் உலகில் இறக்கி வைத்த வேதங்களாவன: தவ்ராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன். இவற்றோடு நபி நூஹ் (அலை) , நபி இப்ராஹீம் (அலை) போன்றோருக்கு சுஹுபுகளும் வழங்கப் பட்டுள்ளன. இறுதி வேதமான அல்குர்ஆன், அதற்கு முந்தியவற்றை விட பரிபூரணமானதாகும்.
வேதங்கள் இறக்கப்பட்டிருக்கவில்லையெனில், மனிதர் கள், இறைவனை அறிவதிலும் வணங்குவதிலும் பெருந்தவறு களை இழைத்திருப்பார்கள். மேலும் ஒழுக்கம், இறையச்சம், அறநெறி, சமூக விதிமுறைகள் போன்ற அவசிய விடயங்களில் இருந்து தூரமாகி இருப்பார்கள்.
எனவே இறைவேதங்கள், இறையச்சம், ஒழுக்க நெறி, சமய சித்தாந்தம், அறிவு நுட்பம், மெய்யியல் போன்ற பல நல்விதைகளை மனிதர் மனங்களில்; விதைத்து, மனிதப் புனிதர்களைப் பயிற்றுவித்து உருவாக்கின.
'ரசூல், தம் இரட்சகனிடமிருந்து தமக்கு இறக்கி வைக்கப்பட்ட வேதத்தை ஈமான் கொள்கின்றார். அவ்வாறே முஃமின்களும் விசுவாசிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு வரும் அல்லாஹ்வையும் அவனது மலக்குகளையும் அவனது வேதங்க ளையும் ரசூல்மாரையும் ஈமான் கொள்கின்றனர்." (02: 285)
முந்திய வேதங்கள் அனைத்தும், மனிதர்களின் குறுகிய சிந்தனையினாலும் அறியாமையினாலும் திரிபுக்கு உட்படுத்தப் பட்டிருக்க, அல்குர்ஆன் மாத்திரம் ஓர் அட்சரமும் மாற்றமின்றி பரிசுத்தமாக பேணப்பட்டு வருகின்றது. அது கதிரவன் போன்று யுகம் யுகமாக இருண்ட உள்ளங்களை ஒளிமயமாக்கிய வண்ணம் திகழ்கிறது.
'திட்டமாக, அல்லாஹ்விடமிருந்து பேரொளியும் தெளிவான ஒரு வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. அல்லாஹ், அதன் மூலம் தன்னுடைய பொருத்தத்தினைப் பின்பற்றுகின்றவர்களை சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகிறான " (05:15,16)
2. அல்குர்ஆன் - இறுதி நபியின் பேரற்புதம்
இறுதி நபிக்கு வழங்கப்பட்ட மிக முக்கிய அற்புதமாக புனித அல்குர்ஆன் விளங்குகின்றது. இவ் அற்புதமென்பது அதன் இலக்கண இலக்கியச் சிறப்பினால் மட்டும் பெற்றுக் கொள்ளப் பட்டதன்று. அதன் எளிமை, கருத்தாழம் போன்ற இன்னோரன்ன காரணிகள் அதன் அற்புதத் தன்மைக்குச் சான்றாகும். இது பற்றி அகீதா மற்றும் இல்முல் கலாம் பற்றிய நமது நூல்களில் விளக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆனுக்கு நிகரான வேதமொன்றை, ஏன் ஓர் அத்தியாயத்தைக் கூட உருவாக்குவது எவராலும் முடியாத விடயமாகும் என்று நாம் நம்புகின்றோம். இது தொடர்பாக சந்தேகம் கொண்டவர்களுக்கு அல்குர்ஆன் பல்வேறு கட்டங்களில் சவால் விடுகின்றது.
')நபியே!) நீர் கூறுவீராக! இந்தக் குர்ஆனைப் போன்று ஒன்றைக் கொண்டு வருவதற்கு மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்தாலும், இதனைப் போன்று அவர்கள் கொண்டு வரமாட்டார்கள். அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளர்களாக இருந்தாலும் சரியே." (17: 88)
'மேலும், நம் அடியார் மீது நாம் இறக்கி வைத்த இவ்வேதம் பற்றி நீங்கள் சந்தேகத் திலிருந்தால், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், அல்லாஹ்வைத் தவிர, உங்கள் உதவியாளர்களை யெல்லாம் அழைத்துக் கொண்டு, இதுபோன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்... (02:23(
அல்குர்ஆன் காலவோட்டத்தில் காலாவதி அடைந்து விடும் தன்மை கொண்டதல்ல. மட்டுமன்றி, அதன் உள்ளடக்கம் வர வர மிகத் தெளிவானதாகவும் அற்புதமானதாகவும் உலகுக்கு வெளிப்பட்டு வருகின்றது.
இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் கூறுகிறார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ், இந்தக் குர்ஆனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ வழங்க வில்லை. அது ஒவ்வொரு காலத்திலும் புதியதாகவே தோன்றும். ஒவ்வொரு கூட்டத்தினரிடத்திலும் மறுமை நாள் வரை புதிதாக செழுமை பெற்றுக் கொண்டேயிருக்கும் ." (பிஹாருல் அன்வார்- பாக 2 - பக் 280)
3. அல்குர்ஆனில் மாற்றம் நிகழாது
இன்று உலக முஸ்லிம்களின் கைகளில் காணப்படும் அல்குர்ஆன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்கு இறக்கியருளப் பட்ட அதே அல்குர்ஆன் தான் என்பதும் அதில் எவ்வித கூட்டல் குறைத்தலும் இடம்பெற வில்லை என்பதும் எமது நம்பிக்கையாகும்.
வஹீயை எழுதி வந்த ஒரு குழுவினர், அல்குர்ஆன் இறங்கிய காலத்திலேயே அதனை எழுத்துருவாக்கம் செய்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் அதன் பகுதிகளை தமது நாளாந்த தொழுகைகளில் பல முறை ஓதி வந்தார்கள். பெரும் தொகையினர் அவற்றை மனனமிட்டுக் கொண்டிருந்தனர். அல்குர்ஆனை அழகுற ஓதுவோரும் மனனமிட்ட வர்களும் எப்போதும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றனர், பெறுகின்றனர். இவ்வாறான காரணங்க ளினால் அல்குர்ஆனில் எவராலும் சிறிய மாற்றத்தைக் கூட ஏற்படுத்த முடியவில்லை.
அத்துடன், உலக முடிவு வரை அல்குர்ஆனைப் பாதுகாக்கும் பணியை அல்லாஹ்வே பொறுப்பேற்று ள்ளான் என்பது அதன் மற்றுமொரு முக்கிய அற்புதமாகும்.
'நிச்சயமாக நாமே இந்த குர்ஆனை இறக்கி வைத்தோம். இன்னும் நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம.;" (15:19)
முஸ்லிம்களின் தலைசிறந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் -ஷீஆ, சுன்னா வேறுபாடின்றி- அல்குர்ஆனில் எவ்வித திரிபுபடுத்தலும் இடம்பெற வில்லையென்ற விசயத்தில் ஏகோபித்த கருத்தையும் முடிவையும் கொண்டுள்ளனர். இவ்விரு கூட்டத்திலு முள்ள சிறு குழுவினர், சில பலவீனமான தகவல்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு, அல்குர்ஆனில் மாற்றம் நிகழ்ந் துள்ளதாக குற்றம் சாட்ட முனைகின்றனர். ஆனால், அவர்கள் ஆதாரமாகக் கொள்ளும் தகவல்கள் மற்றும் தரவுகள் அனைத்தும் மவ்ழூஉ -கட்டி விடப்பட்ட கற்பனைகள்- என ஹதீஸ் கலை அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். மேலும் சில தகவல்கள் தப்ஸீரோடு சம்பந்தப்பட்டவையன்றி புனித குர்ஆனுடன் நேரடியாகத் தொடர்புடையவையன்று.
குறுகிய சிந்தனைப் போக்கும் தெளிவற்ற அறிவும் கொண்ட சிலர், குர்ஆனில் மாற்றம் செய்ததாக ஷீயாக்கள் மீதோ, அஹ்லுஸ் ஸுன்னாக்கள் மீதோ குற்றம் சுமத்துவதற்கு முனைகின்றனர். இத்தகையோர், தமது அறியாமையினால் அல்குர்ஆனின் பரிசுத்தத்திற்கு களங்கம் ஏற்படுத்தி, இஸ்லாத்தின் விரோதிகளுக்கு பல வகைகளில் துணைபோகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் காலத்திலிருந்து அல்குர்ஆன் கோர்வை செய்யப்பட்ட வரலாற்றையும் முஸ்லிம்கள் குறிப்பாக வஹி எழுதுபவர்கள் அவற்றைப் பாதுகாப்பதற்காக எழுதுதல், மனனமிடுதல், ஓதுதல் போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வந்த நிகழ்வுகளையும் ஆராயுமிடத்து, அல்குர்ஆனில் மாற்றங்கள் நிகழ்வதென்பது சிறிதும் சாத்தியமற்றதே என்ற உண்மையை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
மேலும், உலகில் இப்போதுள்ள குர்ஆனைத் தவிர, வேறு குர்ஆன் இல்லை. இதற்கான ஆதாரங்கள் தெளிவாக முன்வைக் கப்பட்டிருப்பதுடன், அது பற்றிய ஆய்வுக்கான வழிகளும் தாராளமாகத் திறந்திருக் கின்றன. அல்குர்ஆன், தற்போது முஸ்லிம்கள் அனைவரது இல்லங்களிலும் இருக்கின்றது. பள்ளிவாசல்கள், பொதுநூலகங்கள் என உலகின் அனைத்து நாடுகளிலும் அனைத்துப் பிரதேசங் களிலும் இருக்கின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட அல்குர்ஆனின் கையெழுத்துப் பிரதிகள் பல நூதனசாலைகளில் காணப்படுகின்றன. எண்ணிலடங்காத மனித நெஞ்சங்களிலும் அது இருக்கின்றது. இவை அனைத்தையும் சான்றாகக் கொண்ட ஆய்வுகளின் முடிவுகள், அல்குர்ஆனின் மாற்றங்களுக்கு உட்படாத புனிதத் தன்மையைத் தெளிவாக பறைசாற்றியிருக்கின்றன. முன்னையரை விட ஆய்வு வசதிகள் அதிகரித்துக் காணப்படுகின்ற இக்கால கட்டத்தில் குர்ஆனைப் பற்றிய இந்த அபாண்டத்தின் பலவீனத்தை இலகுவாகவே நிரூபித்துக் காட்ட முடியும்.
')நபியே!) சொல்லைச் செவியுற்று பின்னர் அதில் மிக அழகானதைப் பின்பற்றுகின்ற என் அடியார்களுக்கு நன்மாராயம் கூறுங்கள்." (39:17,18)
இன்று நமது சமயக் கல்வி நிறுவனங்களில் அல்குர்ஆனியல் சம்பந்தமான பல பாடபோதனைகளும் ஆய்வுகளும் இடம்பெறுகின்றன. அவற்றில் முக்கிய மானது, அல்குர்ஆனில் மாற்றம் நிகழாது என்பது சம்பந்தமானதாகும்.
இந் நூலாசிரியர் யாத்த ஷஅன்வாருல் உஸூல்" மற்றும் "தப்ஸீர் அல் அம்ஸல்" போன்ற நூல்களிலும் கூட இது பற்றிய விரிவான விளக்கங்கள் உள்ளன.
4. அல்குர்ஆனும் ஆன்மீக-இலௌகீக தேவைகளும்
மனிதனின் ஆன்மீக-இலௌகீக வாழ்க்கைக்குத் தேவையான விடயங்கள் அனைத்தினதும் அடிப்படைகள் அல்குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன என்பது நமது உறுதியான நம்பிக்கையாகும். ஓர் அரசாங்கத்தை நிர்வகிப்பது, அரசியல் விவகாரங்களைக் கையாள்வது, ஏனைய சமூகத்தவர்களுடனான உறவுகள், சக வாழ்வின் அடிப்படைகள், போரும் சமாதானமும், சட்ட மற்றும் நீதி நிர்வாகம், பொருளாதார விவகாரங்கள் போன்ற இன்னோரன்ன அம்சங்கள் பற்றிய வழிகாட்டல்கள் குர்ஆனில் காணப்படுகின்றன. அவற்றைப் பின்பற்றி ஒழுகும் போது நமது வாழ்வு ஒளிமயமானதாக மாறும்.
')நபியே!) ஒவ்வொரு விடயத்திற்கும் தெளிவாகவும் நேர்வழியாகவும் அருளாகவும் முற்றிலும் தங்களை இரட்சகனிடம் ஒப்படைத்து விட்டவர்களுக்கு நன்மாராய மாகவும் உம் மீது நாம் இவ்வேதத்தை இறக்கினோம்." (16: 89)
எனவே சமயம் வேறு, அரசியல் வேறு என்ற பகுப்புகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. அரசாட்சியைக் கையிலெடுத்து, இஸ்லாத்தின் உயரிய விழுமியங்களை அதன் மூலம் உயிர்ப்பிக்குமாறு அது கூறுகின்றது. அவ்உயிரோட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தைப் பயிற்றுவித்து, மக்கள் மத்தியில் சமநீதி வழங்குமாறும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
'விசுவாசங் கொண்டோரே! உங்களுக்கோ, அல்லது உங்கள் பெற்றோருக்கோ, அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருந்த போதிலும், நீதியை நிலைநிறுத்தியவர்களாக, அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாக இருங்கள்... (04: 135)
'எந்த சமூகத்தவரின் மீதான விரோதமும், நீங்கள் அநீதமாக நடந்து கொள்ள உங்களைத் தூண்டி விட வேண்டாம். நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும்." (05: 08)
5. அல்குர்ஆனை ஓதுதல், ஆராய்தல், அமல்செய்தல்
அல்குர்ஆனை ஓதுவது மிகச் சிறந்த வணக்கங்களில் ஒன்றாகும். ஏனெனில், குர்ஆனை ஓதும் போது, அது அல்லாஹ் வைப் பற்றிய சிந்தனைக்கும், அறிவுக்கும் தூண்டுகோலாக அமைகின்றது. சிந்தனையென்பது, நற்காரியங்களின் ஊற்றுக் கண்ணாகும். அல்குர்ஆன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களைப் பார்த்துக் கூறுகின்றது:
'இரவில் சொற்ப நேரம் தவிர எழுந்திரும்! அதில் பாதி விழித்திரும். அல்லது அதிலிருந்து சொற்பத்தைக் குறைத்துக் கொள்ளவும். அல்லது, அதை விட அதிகப் படுத்திக் கொள்ளவும்.. அதில் குர்ஆனை நன்கு திருத்தமாக நிறுத்தி நிறுத்தி ஓதுவீராக." (73: 2-4)
அல்குர்ஆன் அனைத்து முஸ்லிம்களையும் பார்த்துக் கூறுகின்றது:
'எனவே, குர்ஆனிலிருந்து தங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்... (73: 20)
அல்குர்ஆனை ஓதுவதென்பது, அதன் கருத்தையும், அதில் கூறப்பட்டிருக்கும் விசயங்களையும் பற்றி சிந்திப்பதற்குக் காரணியாக அமைய வேண்டும். சிந்தித்து ஆராய்ச்சி செய்வது அல்குர்ஆனின் வழிகாட்டலின் பிரகாரம் அமல் செய்வதற்கான முதலாவது படியாகும்.
'அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது அவர்களது இதயங்கள் மீது பூட்டுக்கள் இடப்பட்டுள்ளனவா?" (47: 24)
'திட்டமாக நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, இதனைக் கொண்டு படிப்பினை பெறக் கூடியவர் உண்டா?" (54: 17)
'உமக்கு நாம் இறக்கியிருக்கும் இவ்வேதம் பரக்க த்துப் பெற்றதாகும். எனவே, அதைப் பின்பற்றுங் கள்." (06:155)
ஆகவே எவர் குர்ஆனை ஓதுவதிலும் அதை மனனம் செய்வதிலும் மாத்திரம் தமது முயற்சியையும் கவனத்தையும் மட்டுப்படுத்திக் கொள்கிறாரோ அவர்கள் அல்குர்ஆனை ஆராய்ந் தறிதல் மற்றும் அமல் செய்தல் ஆகிய இரண்டு முக்கிய விடயங் களையும் விட்டு விடுபவர்களாக இருக்காமல் அவதானித்துக் கொள்ள வேண்டும்.
6.தப்ஸீரின் விதிமுறைகள்
அல்குர்ஆன் வசனங்களை மொழியிலும் வழக்கிலும் உள்ள கருத்துகளிலே விளங்கிக் கொள்வது முக்கியமாகும். ஒரு சொல்லின் அர்த்தத்தை வரையறுக்கின்ற அல்லது வேறொரு பொருளைச் சுட்டுகின்ற விதத்திலான குர்ஆன், ஹதீஸ் மற்றும் அறிவு சார்ந்த ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் மாத்திரம் நாம் அதற்கொப்ப பொருள் கொள்ள முடியும்.
ஆனால், குர்ஆனுக்கு சந்தேகத்துடன் அல்லது சுய அபிப்பிராயத்தின் அடிப்படையில் விளக்கம் கொடுப்பதைத் தவிர்ந்து கொள்வது கடமையாகும். உதாரணமாக, பின்வரும் குர்ஆன் வாக்கியத்தை நோக்குவோம்.
'எவர் இவ்வுலகில் குருடராக இருக்கின்றாரோ, அவர் மறுமையிலும் குருடரே... (17:72)
இங்கு குருடன் எனக் கூறப்பட்டிருப்பது, அங்கக் குறைபாடாகிய பார்வை ர்Pதியான குருட்டு நிலையைன்றி, அக ரீதியான குருட்டு நிலையையே குறிக்கின்றது என்பது உறுதி. அதாவது அகப்பார்வையை இழந்தவர்கள் பற்றியே இவ்வசனம் பேசுகின்றது.
ஏனெனில், உலகில் அநேக நல்லடியார்களும் இறை நேசர்களும் கண்பார்வையற்றவர்களாக வாழ்ந்துள்ளார்கள். இங்கே குருடு என்பது மொழி ரீதியாக நாம் புரிந்து கொள்ளும் கருத்தன்றி இதயங்களின் குருட்டுத் தன்மையைக் குறிப்பதென அறிவுபூர்வமாகப் புரிந்து கொண்டோம்.
அதே போன்று, அல்குர்ஆன் இஸ்லாத்திற்கு எதிரான கூட்டத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றது:
'செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள். ஆதலால் அவர்கள் எதையும் அறிந்து உணர மாட்டார்கள்." (2:171)
இவ்வசனத்தை வெளிப்படையாக நோக்குமிடத்து செவிடு, ஊமை, குருடு ஆகிய மூன்று அங்கக் குறைபாடுகளும் உடையோர், எதையும் அறிந்து கொள்ள முடியாதவர்கள், அறிவிலிகள் என்ற கருத்துப் பிரதிபலிக்கின்றது. ஆயினும், இங்கு குறிப்பிடப்படும் நபர்கள் இத்ததைகய அங்கவீன முற்றவர்களாகக் காணப்படவில்லை. இம்மூன்று குறைபாடு களும் அகநிலை சார்ந்த குறைபாடுகள் பற்றிய வர்ணிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அல்குர்ஆன், அல்லாஹ்வைப் பற்றிக் குறிப்பிடும் போது இவ்வாறு வர்ணிக்கிறது.
'எனினும், அவனது இருகைகளும் விரிக்கப் பட்டிருக்கின்றன... (05:64)
')நூஹே!) எமது கண் முன்பாகவே கப்பலை நீர் செய்யும்...(11:37)
இவ்வசனங்கள், அல்லாஹ்வுக்கு கைகள், கண்கள் போன்ற உடலுறுப்புகள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றன என்று பொருள் கொண்டு விடக் கூடாது. ஏனெனில் உறுப்புகள் உடலில் இருப்பவை. உடலோ அழிந்து விடுவது. இத்தகைய பண்புகளை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.
இங்கு அல்லாஹ்வின் கைகள் எனப்படுவது, அனைத்துலகையும் தனது கட்டளையின் கீழ் கொண்டிருக்கும் அவனது பூரண இறை சக்தியையும், கண்கள் எனப்படுவது, அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய அவனது விசாலமான அறிவையும் குறிப்பிடக் கூடியதாகும்.
எனவே, மேலுள்ளவாறான வசனங்கள் குறிப்பிடும் கருத்துகளில் -அது அல்லாஹ்வினது சிபாத்துகளோ, வேறு அம்சங்களோ எதுவாயினும்- அக்ல், நக்ல் உடைய ஆதாரங்களின் அடிப்படையிலான வரையறைகளைக் கவனிக்காது தவிர்த்து விட்டு வெறும் மேலோட்ட மொழியர்த்தத்தில் தங்கி விடுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும்.
ஏனெனில், உலகின் அனைத்துப் பேச்சாளர்களும் இவ்வாறான போக்கையே கையாளுகின்றனர். அல்குர்ஆனும் இப்போக்கை ஏகமனதாக அங்கீகரிக் கின்றது. ஈண்டு கவனிக்கத் தக்கது என்னவெனில் அத்தகைய வரையறைகளுக்கான ஆதாரங்கள் உறுதியானவையாக இருக்க வேண்டும் என்பதே.
'எந்தவொரு தூதரையும் அவரது சமூகத்தாரின் மொழியைக் கொண்டேயல்லாது நாம் அனுப்ப வில்லை." (14:04)
7. சுய விரிவுரையின் விபரீதங்கள்
அல்குர்ஆனுக்கு சுய அபிப்பிராயத்தின் அடிப் படையில் விளக்கம் கொடுப்பது மிகவும் ஆபத்தான விடயமாகும். மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகவும் அது கணிக்கப்படுகின்றது. அல்லாஹ்வை நெருங்குவ திலிருந்து தூரமாவதற்கும் இது ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது. அல்லாஹ் கூறுவதாக ஹதீஸுல் குத்ஸியில் குறிப்பிடப்படுகின்றது:
'எவனொருவன், எனது வேதத்திற்கு சுய அபிப்பிராயத் தைக் கொண்டு விரிவுரை கொடுக்கின்றானோ, அவன் என்னை ஈமான் கொள்ளவில்லை." (வஸாயில் - பாக 18 - பக 28 ஹதீஸ் 22)
உண்மையில் ஒருவர் பூரண ஈமானுடைய வராயின், இறைவசனங்களை தனது சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற விதத்தில் அல்லாமல், உள்ளதை உள்ளபடி மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வார்.
மேலும் ஸஹீஹ் திர்மிதி, நஸாயீ, அபூதாவூத் போன்ற பிரபல்யமான கிரந்தங்களிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி கூறியதாக ஒரு ஹதீஸ் குறிப்பிடப்படுகின்றது:
'எவனொருவன் குர்ஆனுக்கு தனது சுய விருப்பின் பேரில் விரிவுரை கொடுக்கின்றானோ அல்லது அது பற்றி தனக்குத் தெரியாத ஒன்றைக் கூறுகின்றானோ, அவன் நரகில் தனது ஆசனத்தை ஒதுக்கிக் கொள்கிறார்." (மபாஹிஸ் ஃபீ உலூமில் குர்ஆன் - மன்னாஃ அல்கத்தான் - பக் 304)
எத்தகைய பின்னணியும் ஆதாரமும் இன்றி தமது சொந்த அல்லது தாம் சார்ந்துள்ள குழுவின் விருப்பு வெறுப்புகள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் குர்ஆனை விளங்குவதும் அவ்விளக்கத்தின் பிரகாரம் செயல்படுவதுமே இங்கு குறிப்பிடப் படுகிறது. உண்மையில் இத்தகையோர் குர்ஆனைப் பின்பற்றுவோர் அல்லர். மாறாக, குர்ஆன் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இசைவுபட வேண்டுமென விரும்புகிறார்கள். குர்ஆன் பற்றி சரியான ஈமான் உள்ள எவரும் இக்காரியத்தில் இறங்க மாட்டார்கள்.
சுயவிருப்பின் பேரிலான விரிவுரைகளுக்கு இடமளிக்கப் படுமானால், அல்குர்ஆன் தனது அந்தஸ்திலிருந்தும் தரத்தில் இருந்தும் முற்றாக விழுந்துவிடக் கூடும். அதாவது, தத்தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப விளங்கிக்க கொள்பவர் எந்தப் பிழையான கொள்கையையும் குர்ஆனில் இருப்பதாகக் காட்ட முனையலாம்.
இதன்படி, சுய அபிப்பிராயப் படி குர்ஆனுக்கு விரிவுரை செய்வதானது, அதாவது, முறையான மொழி ஞானம், அரபு இலக்கியம் மேலும் அராபியர்கள் புரிந்து கொள்ளும் முறை என்பவற்றுக்கு முற்றிலும் முரண்படுகின்ற விதத்தில் தமது தனிப்பட்ட அல்லது ஒரு குழுவின் பிழையான சிந்தனைகள் மற்றும் கற்பனைகளுக்கு ஏற்ப குர்ஆனிய கருத்துக்களை விரிவுரை செய்வதானது, அல்குர்ஆனின் கருத்துக்கள் திரிபடை வதற்கு காரணமாகின்றது.
சுய அபிப்பிராயத்தின் அடிப்படையில் குர்ஆனுக்கு விரிவுரை வழங்கும் ஷதப்ஸீர் பி அல் ரஃயு" பல கிளைகளைக் கொண்டது. சில அல்குர்ஆன் வசனங்கள் விசயத்தில் பாரபட்சமாக, ஓர வஞ்சனையாக நடந்து கொள்வதும் அத்தகைய ஒன்றாகும். இதனை இவ்வாறு விளக்கலாம். உதாரணமாக சஃபாஅத், தவ்ஹீத், இமாமத் போன்ற சில தலைப்புகள் சம்பந்தப்பட்ட ஆயத்துகளில் தாம் ஏற்கனவே கொண்டுள்ள கொள்கை அல்லது நம்பிக்கைக்குச் சார்பாக அமைபவற்றையே தேர்ந் தெடுப்பர். தமது கொள்கை அல்லது நம்பிக்கைக்கு இயைபுடையதாக அமையாத ஆயத்து களை, அவை வேறுவகையில் சம்பந்தப்பட்ட ஆயத்துகளுக்கு விளக்கமாக அமையக் கூடிய போதிலும் அவற்றைக் கவனத்தில் எடுப்பதில்லை அல்லது கண்டும் காணாதது போல நழுவி விடுகின்றனர்.
குர்ஆனின் சொற்களை அவற்றின் மேலோட்ட வெளி அர்த்தத்தில் மாத்திரம் விளங்கிக் கொள்வதும் அது பற்றி அறிவுபூர்வ அல்லது மூலாதாரம் சார்ந்த பின்னணிகளைக் கவனத்திற் கொள்ளாமல் விடுவதும் எவ்வாறு குர்ஆனின் மூல அர்த்தத்தைத் திரிபுபடுத்துமோ, சுய அபிப்பிராயத்தின் படி அதனை விரிவுரை செய்வதும் அதே போன்ற திரிபு படுத்தலாகவே கருதப்படுகின்றது. இவை அனைத்தும் புனித குர்ஆனின் அதியுயர்ந்த போதனைகளிலிருந்தும் பெறுமானங்களிலிருந்தும் தூரமாக்கி விடுபவையாகும்.
8. குர்ஆனுக்கு விளக்கமாகும் நபிகளாரின் ஸுன்னா
அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் வழிமுறைகள் விளங்குகின்றன. அவ்வழிமுறைகளின் அடிப்படையில் நாஸிஹ்-மன்ஸூஹ், பொதுவானவை-சிறப்பானவை (ஆம்மு-காஸ்ஸு) முதலான குர்ஆனியல் சார்ந்த அறிவுகளையும் மார்க்கத்தின் அடிப்படை மற்றும் கிளை அம்சங்கள் பற்றிய போதனைகளையும் புரிந்து கொள்ள முடிகின்றது. எனவே இத்தகைய அம்சங்களைப் புறக்கணித்து விட்டு, குர்ஆன் மாத்திரம் எமக்குப் போதுமானதென யாரும் கூறிவிட முடியாது. திரு நபியின் போதனைகளையும் நடை முறைகளையும் முஸ்லிம்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஓர் அடிப்படையாகவும் இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதற்கும் சட்டங்களைத் தொகுத்துக் கொள்வதற் குமான மூலாதாரங்களில் ஒன்றாகவும் குர்ஆன் பிரகடனம் செய்கிறது.
'இறைத்தூதர் உங்களுக்கு எவற்றைக் கொண்டு வந்தாரோ, அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். எவற்றை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அவற்றிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்." (59: 07)
'அல்லாஹ்வும், அவனது தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்து விட்டால், அவர்க ளுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ, அவர் பகிர ங்கமான வழிகேட்டில் திட்டமாக வழிகெட்டு விட்டார்." (33:36)
நபிகளாரின் ஸுன்னாவை அலட்சியம் செய்வோர் உண்மையில் அல்குர்ஆனை மதிக்கிறார்களில்லை. அதேவேளை, நபிகளாரின் வழிமுறைகள் பற்றிய தகவல்கள், பல்வேறு அறிவிப்புகள் மூலம் உறுதிப்படுத்தப்படல் அவசியமாகும். நபிகளாரைத் தொடர்புபடுத்திக் கூறப்படும் அனைத்து அறிவப்புக ளையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஹஸ்ரத் அலீ அலைஹிஸ் ஸலாம் அறிவிப்பதாவது, 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அவர்கள் மீது சிலர் பொய்யுரைத்தனர். இதனால், நபியவர்கள் ஒருநாள் குத்பாவின் போது இவ்வாறு குறிப்பிட்டார்கள்:
'எவரொருவர் என்மீது வேண்டுமென்று பொய் கூறுகின்றாரோ, அவர் நரகில் தனக்கென ஓரிடத்தைத் தயார்படுத்திக் கொள்கிறார்." )நஹ்ஜுல் பலாகா, குத்பா 210)
இதேபோன்ற கருத்துள்ள ஹதீஸ் ஒன்று ஸஹீஹ் புஹாரி, முதலாம் பாகத்தின் 28ம் பக்கத்தில் (நபிகளார் மீது அபாண்டம் சுமத்துவோர் பற்றிய அத்தியாயம்) வந்துள்ளது.
9. அஹ்லுல் பைத் இமாம்களின் வழிமுறைகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது கட்டளையின்படி, அவர்களது பரிசுத்தக் குடும்பத்தினரான அஹ்லுல் பைத் இமாம்கள் கூறிய ஹதீஸ்களையும் பின்பற்றி நடப்பது கடமையாகும் என நாம் நம்புகின்றோம். இதற்கான ஆதாரங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. ஷீயா-சுன்னா இரு தரப்பினரும் அநேகமான கிரந்தங்களில் அனைவரிடமும் பிரபல்யமாகி மறுப்புக்கு இடமில்லாத (முதவாதிரான) ஹதீஸ் ஒன்று இக்கருத்தை தெளிவுபடுத்தியுள்ளது. ஸஹீஹ் திர்மதியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறியதாக வந்துள்ளதாவது:
'மனிதர்களே! உங்களுக்கு மத்தியில் ஒன்றை விட்டுச் செல்கின்றேன். அதை நீங்கள் எடுத்து நடக்கும் காலமெல்லாம் வழிதவற மாட்டீர்கள். அது இறைவேதமும், எனது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்துமாகும்." (ஸஹீஹ் திர்மதி - பாக 5 - பக் 662 ஹதீஸ் 3786)
2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் வழித்தோன்றலாக வந்த இமாம்கள் அனைத்து ஹதீஸ்களையும் நபியவர்களிடமிருந்தே எடுத்துச் சொல்லி யிருக்கின்றார்கள். மேலும் அவர்கள், 'நாங்கள் சொல்வது எல்லாம், நபிகளாரிடமிருந்து எங்களது தந்தையர்களுக்கும், அவர்களிடமிருந்து எமக்கும் கிடைத்தவையாகும்" என்று சொன்னார்கள்.
ஆக, உள்ளடக்கத்திலும் அறிவிப்பாளர் வரிசையிலும் மிக வலுவான திர்மிதியிலுள்ள மேற்படி ஹதீஸை அவதானிக்காது மிகச் சாதாரணமாக விட்டுவிட முடியுமா? எனவே தான், இது விடயத்தில் கூடுதல் அக்கறை காட்டப்பட்டிருப்பின் .ன்று முஸ்லிம்கள் எதிர் நோக்கியுள்ள அகீதா, பிக்ஹ், தப்ஸீர் முதலிய பல்வேறு துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் நிச்சயமாக இருந்திருக்காது என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக